என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம்
- அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
- வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது.
சென்னை:
திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவையின் போது, ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டு தோறும் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.
திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 11 வெண் திருக்குடைகள்.
250 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் இருந்து திருக்குடைகள் ஊர்வலமாகச் எடுத்துச் செல்லப்படுகிறது.
அதன்படி ஏழுமலையான் கருடசேவைக்கு சென்னையில் இருந்து 11 வெண்பட்டு திருக்குடைகள் இன்று காலை சென்னை பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மக்கள் நலமும், வளமும் பெறவும், விவசாயம் செழிக்கவும், நீர்வளம் பெருகவும் சங்கல்பம் செய்யப்பட்டது.
அதன் பின் மதியம் 12 மணிக்கு திருக்குடைகள் ஊர்வலத்தை ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோவில் மவுனகுரு பாலமுரு கனடிமை சுவாமிகள், கலவை கமலக்கண்ணியம்மன் கோவில் சச்சிதானந்தா சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்து தர்மார்த்த சமிதியின் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் கொடி அசைத்தனர். திருக்குடை ஊர்வலத்தை காண அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி கோஷங்களுடன் திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு சென்றது.
என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று மாலை 4 மணிக்கு யானை கவுனி தாண்டுகிறது. பின்னர், யானைக்கவுனி காவல் நிலையம், பேசின் பிரிட்ஜ், யானைக்கவுனி பிரிட்ஜ் ரோடு வழியாக திருக்குடை ஊர்வலம் செல்கிறது. அயனாவரம், வில்லிவாக்கம், திருமுல்லைவாயல், திருவள்ளூர் வரை திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமலைக்கு சென்றடைகிறது.
வருகிற 21-ந்தேதி திருக்குடைகள் திருமலையை சென்று அடைகிறது. அங்கு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏழுமலையானுக்கு வஸ்திரம், மங்கலப்பொருட்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படுகிறது.