என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.150- வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.150- வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை](https://media.maalaimalar.com/h-upload/2023/07/12/1914067-tomato.webp)
கோயம்பேட்டில் இன்று தக்காளி விலை கிலோ ரூ.150- வரத்து அதிகரித்தும் விலை குறையவில்லை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர்.
- தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை ஏறுமுகமாகவே இருந்தது. இன்று கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு 30 லாரிகளில் தக்காளி வந்து குவிந்தது.
நேற்று 23 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்த நிலையில் இன்று அதன் வரத்து சற்று அதிகரித்து உள்ள போதிலும் தக்காளி விலை குறையாமல் மேலும் அதிகரித்து உள்ளது. உற்பத்தி நடக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் குவிந்து தக்காளியை கொள்முதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக தக்காளிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தக்காளி மொத்த வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக தக்காளி ஒரு கிலோ ரூ130-க்கும், மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரையிலும் விற்கப்படுகிறது. அதேபோல் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ ரூ.160 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது இல்லத்தரசிகள் இடையே பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 2 நாட்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 ஐ எட்டி இரட்டை சதம் அடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்ற காய்கறிகளும் விலை உயர்வாகவே உள்ளது. அதன் விலை விபரம் வருமாறு:-
நாசிக் வெங்காயம் 1 கிலோ-ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.110, உருளைக்கிழங்கு-ரூ.35, பீன்ஸ்-ரூ.120, அவரை ரூ.50, வெண்டை ரூ.50, உஜாலா கத்தரிக்காய் ரூ.50, ஊட்டி கேரட் ரூ.50, பீட்ரூட் ரூ.40, வெள்ளரி ரூ.20, முருங்கை ரூ.40, பாகற்க்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.70, முட்டை கோஸ் ரூ.25, முள்ளங்கி ரூ.25, புடலை ரூ.25, கோவக்காய் ரூ.25, இஞ்சி ரூ.270.