search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் பணிகள் 3 மாதத்தில் முடிவடையும்
    X

    வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான பறக்கும் ரெயில் பணிகள் 3 மாதத்தில் முடிவடையும்

    • வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது.
    • ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது.

    இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதால் 9 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 2007-ம் ஆண்டு 3 கி.மீ தூரத்துக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

    இதில் வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

    அந்த வழி பாதையில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் கடந்த 11 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது.

    2020-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு பணிகள் நடைபெறத் தொடங்கியது. இப்போது ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என எதிர்பாக்கப்படுகிறது.

    இதுகுறித்து சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் நிலையத்தை நீட்டித்து அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 3 கி.மீ தூரத்தில் 2.4 கி.மீ தூரம் தூண்கள் அமைத்து பணிகள் முடிந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 600 மீட்டர் தூரம் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.

    தற்போது அந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் பணிகள் முடிவடைந்து விடும். அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×