என் மலர்
தமிழ்நாடு
எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை 28-ந்தேதி இலவசமாக பார்க்கலாம்
- காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
- பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் என மொத்தம் 30,285 பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் கடந்த 28.9.2021 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. காவல் அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்ட நாள் முதல் இந்த ஓர் ஆண்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல் உயர் அதிகாரிகள், வெளிநாட்டவர்கள், பல்வேறு திரைத்துறையுனர் மற்றும் தமிழக காவல் துறை, நீதித்துறை, ஆட்சிப் பணி உயர் அதிகாரிகள், காவல் சிறார் மன்ற மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட பார்வையாளர்கள் என மொத்தம் 30,285 பார்வையாளர்கள் காவல் அருங்காட்சியகத்திற்கு நேரில் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சி, காவல் மோப்ப நாய் கண்காட்சி, காவல் குதிரை கண்காட்சி, சிலம்பம், மைம் கூத்து, பொம்மலாட்டம், வினாடி வினா நிகழ்ச்சி, தோட்டக் கலை பயிற்சி, மரபு நடை நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களின் தாக்கம், தற்கொலை தடுப்பு, மாசு கட்டுப்பாடு போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
காவல் அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு நாளினையொட்டி வருகிற 28-ந்தேதி ஒரு நாள் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 14-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, விவாத மேடை, மாறுவேடப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு ஒரு வருட நிறைவு நாளான வருகிற 28-ந்தேதி எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் காலை 11 மணிக்கு காவல் வாத்தியக்குழுவின் இசை நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு மோப்ப நாய் கண் காட்சியும் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்க உள்ளனர்.