என் மலர்
தமிழ்நாடு
திரு.வி.க.நகர் மண்டல பகுதிக்கு ரெட்டேரி ஏரி தண்ணீர் சப்ளை செய்யப்படுவது எப்போது?
- ரெட்டேரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது.
- புழல், செம்பரம்பாக்கம் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது.
கொளத்தூர்:
சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
இந்த ஏரிகளில் இருந்து சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதி முழுவதும் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் கோடை காலங்களில் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு மாற்று ஏற்பாடாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஏரி,குளங்களில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் அருகே உள்ள ரெட்டேரி தண்ணீரை சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்த ரூ.22 கோடியில் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ரெட்டேரி சுமார் 280 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இங்கிருந்து தண்ணீரை சுத்திகரித்து திரு.வி.க. நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப சுத்திகரிப்பு நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் திறக்கப்பட்டது. தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டு 4 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் ரெட்டேரி தண்ணீர் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதுவரை ஏரிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட வில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு புழல், செம்பரம்பாக்கம் தண்ணீர் சுத்திகரித்து அனுப்பப்படுகிறது. தற்போது ரெட்டேரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் அடுத்த ஆண்டு வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
மேலும் ரெட்டேரி ஏரியை மேம்படுத்த ரூ.43 கோடி திட்டப்பணியை நீர்வளத்துறை மேற்கொள்ள உள்ளது. இதில் ஏரியின் கொள்ளளவை 102 மில்லியன் கனஅடியில் இருந்து 133 மில்லியன் கனஅடியாக ஆக உயர்த்தி ஆழப்படுத்துதல், மாதவரம் ரவுண்டானா அருகே ஏரியை சுற்றி 3.6 கி.மீட்டர் கரைகள் மற்றும் 1 கி.மீட்டர் தூரத்திற்கு சுவர் கட்டுதல், 23 ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். இந்த பணி முடிய சுமார் ஒன்றரை ஆண்டு ஆகும் என்றார்.