search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஏன்?
    X

    பா.ஜனதாவுக்கு எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது ஏன்?

    • பா.ஜனதா மேலிட தொடர்பு காரணமாகத்தான் தங்களுடன் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
    • பா.ஜனதா தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது எடப்பாடி பழனிசாமியை எரிச்சல்அடைய வைத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இதனால் தான் இந்த இரு கட்சிகளுக்கிடையே உரசல் ஏற்படும் போதெல்லாம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்கிறார்கள்.

    பா.ஜனதா தனித்து போட்டியிடும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறியதும் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை அழைத்து வைத்து சமரசம் செய்து வைத்தார் அமித்ஷா.

    இந்த சூழ்நிலையில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். பா.ஜனதா கொண்டு வர திட்டமிட்டு உள்ள பொது சிவில் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிக்காது என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்து பா.ஜனதாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி முடிவுக்கான பின்னணி காரணங்கள் பற்றி கட்சி வாட்டாரத்தில் கூறப்படுவதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை பா.ஜனதாவுடன் தான் கூட்டணி என்ற நிலையில் தான் இருந்துள்ளார். ஆனால் பா.ஜனதா தலைமை எடப்பாடி பழனிசாமி நம்பிய அளவுக்கு தன்னை அவர்கள் நம்பவில்லை என்று நினைக்கிறார்.

    அதற்கு காரணம் கூட்டணியை பலப்படுத்தும் நோக்கத்தில் தனது எதிரிகளான ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோரை ஒன்றுசேர்க்கும் முயற்சியை பா.ஜனதா மீண்டும் கையில் எடுத்து இருப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    பா.ஜனதா மேலிட தொடர்பு காரணமாகத்தான் தங்களுடன் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதற்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதுவும் எடப்பாடி பழனிசாமியை எரிச்சல்அடைய வைத்துள்ளது.

    முக்கியமாக அ.தி.மு.க. தனது கட்டுப்பாட்டில் வலிமையாக இருக்கும் நிலையிலும் அ.தி.மு.க.வை வலிமையான இயக்கமாகவோ, தன்னை வலிமையான தலைவர் என்றோ பா.ஜனதா தலைவர்கள் கருதவில்லை என்பதும் எடப்பாடி பழனிசாமியின் ஆதங்கம். அதனால் தான் 'அ.தி.மு.க. உடையவில்லை. கட்டுக்கோப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தொகுதி பங்கீடு விஷயத்திலும் பா.ஜனதா சொல்வதை அ.தி.மு.க. கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லி தலைவர்கள் இருப்பதாகவும், நீ பாதி நான் பாதி என்ற ரீதியில் புதுவை உள்பட 40 தொகுதிகளில் 20 தொகுதி கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அந்த 20 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கிட்டு கொடுக்கிறோம் என்று பா.ஜனதா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையும் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை. தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை நாங்கள் தான். எனவே கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு எல்லாம் எங்களோடு தான் இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.

    அதனால் தான் அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எப்படி கூட்டணி அமைத்தார்களோ அதே போன்று காலம் கனிந்து வரும் போது கூட்டணி பற்றி பேசுவோம் என்று குறிப்பிட்டுள்ளதாக கருதுகிறார்கள்.

    அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை திரட்டி காட்டுவோம். அதன் பிறகு நமது பலத்தை பார்க்கட்டும் என்று கூறி இருக்கிறார்.

    Next Story
    ×