என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் சாலையோரங்களில் 3 ஆயிரம் பழுதடைந்த வாகனங்கள் கேட்பாரற்ற கார்,பைக், ஆட்டோக்கள் அகற்றப்படுமா?
- சென்னையில் சாலையோரங்களில் பழுதடைந்த 3 ஆயிரம் வாகனங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன.
- சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
சென்னை:
சென்னையில் மாநகர சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே தேவையற்ற வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.இதனால் காலை, மாலை என எப்போதும் முக்கிய சாலை பகுதிகளில் நெரிசல் ஏற்படுகின்றன.
இதற்கு சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமல்ல சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு காரணம் ஆகும். சென்னையில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 2000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
சென்னையில் சுமார் 50 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள் பஸ்கள் தனியார் பஸ்கள், வேன்கள் சாலையோர இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றன. கால்டாக்சிகள், ஆட்டோக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இடநெருக்கடியால் வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாமல் போய்விட்டன.
சென்னை மாநகர போக்குவரத்து நெரிசல் ,சாலையோர, தெருவோர ஆக்கிரமிப்புகள் தற்போது பெருகி வருகின்றன. எழும்பூர் நுங்கம்பாக்கம்,புரசைவாக்கம், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றன. சாலையோரங்களில் பழுதடைந்த உபயோகமற்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிடக்கின்றன.
சென்னை மாநகரம் முழுவதும் 3 ஆயிரம் பழுதடைந்த கார், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரங்களில் பழுதான, கேட்பாராற்று கிடந்த வாகனங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் ஏலம் விடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை மாநகரம் முழுவதும் கேட்பாரற்ற பழுதான வாகனங்கள் சாலையோர பகுதிகளில் ஆங்காங்கே குவிந்து வருகின்றன.பழுதடைந்த வாகனங்களை சரி செய்ய முடியாமல் பொதுமக்கள் அதனை ரோட்டோர பகுதிகளில் விட்டு சென்று உள்ளனர். இந்த வாகனங்களால் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி, போக்குவரத்து துறை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சாலையோரம், குடியிருப்பு பகுதிகள், காலி இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
மாநகரம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில், மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை, வேப்பேரி, கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர், வடபழனி, விருகம்பாக்கம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் என அனைத்து இடங்களிலும் போலீசார் ரோந்து சுற்றி, நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் அருகே குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு சம்பந்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சென்னை மாநகர சாலையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த 890 பைக்குகள், 55 ஆட்டோக்கள் மற்றும் 41 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 989 வாகனங்களின் பதிவு எண்களை வைத்து உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் 38 பைக்குகள், 2 ஆட்டோக்கள் மற்றும் 14 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 54 வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உரிமை கோராத முறையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லாத 465 வாகனங்கள் மற்றும் 25 ஆட்டோக்கள் என மொத்தம் 490 வாகனங்கள் குற்றவியல் நடை முறை சட்ட பிரிவு 102-ன் கீழ் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து போலீசார் சோதனையில் 16 பைக், 4 ஆட்டோக்கள், 21 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.இதுவரை மொத்தம் 1,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.