என் மலர்
தமிழ்நாடு
மகளிர் உரிமைத் தொகை திட்டம்: சென்னையில் குடும்பத் தலைவிகள் விவரம் சரி பார்க்கும் பணி 6-ந்தேதி தொடக்கம்
- குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்களா? என்பது போன்றவற்றை சரி பார்க்கிறார்கள்.
- முகாம் தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 51 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்ப பதிவு செய்து உள்ளனர்.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவதற்கான விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டு பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் 17 லட்சம் குடும்ப அட்டைகள் இருப்பதால் 2 கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு முகாம்களில் விண்ணப்ப படிவ விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. 1,727 சிறப்பு முகாம்களில் 4-ந்தேதி வரை இப்பணி நடக்கிறது.
இதுவரையில் 6 லட்சத்து 18 ஆயிரம் விண்ணப்பங்கள் முதல் கட்டமாகவும், 53,568 படிவங்கள் 2-வது கட்டமாகவும் வழங்கப்பட்டன. நேற்று வரை 4 லட்சத்து 33 ஆயிரத்து 326 பேர் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட விண்ணப்ப பதிவு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.
முதற்கட்டம் முடிவடைகிற நிலையில் 2-வது கட்ட விண்ணப்ப படிவம் வழங்கும் பணி ஒரு சில இடங்களில் தொடங்கியுள்ளது. 102 வார்டுகளுக்கு உட்பட்ட 724 ரேஷன் கடைகள் பகுதியில் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதற்கிடையில் விண்ணப்பங்களை பதிவு செய்த குடும்பத் தலைவிகளின் விவரங்கள் சரி பார்க்கும் பணியும் விரைவில் தொடங்க உள்ளது. படிவத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ள விவரங்கள் சரி தானா? திட்டத்தின் நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா?
ஏற்கனவே உதவி தொகை ஏதேனும் வாங்குகிறார்களா? ஏற்கனவே பெறும் உதவித் தொகையை மறைத்து மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து உள்ளார்களா? என்பதை ஆய்வு செய்கிறார்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே குடும்பத்தில் விண்ணப்பித்து இருக்கிறார்களா? என்பது போன்றவற்றை சரி பார்க்கிறார்கள்.
இந்த பணி வருகிற 6-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை வீடு வீடாக நடக்கிறது. இந்த பணியில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
100 சதவீதம் கள ஆய்வு நடத்திய பிறகுதான் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை மாதந்தோறும் வங்கி கணக்கில் வழங்கப்படும். 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் முடிந்தவுடன் 16-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சரி பார்க்கும் பணி தொடங்குகிறது. தகுதியானவர்கள் யாரும் விடுபட்டு விடாமலும் குடும்ப தலைவிகள் தவறான தகவல்களை கொடுத்து உதவியை பெறுவதை தடுக்கவும் சான்றிதழ் சரிபார்ப்பு தீவிரமாக நடைபெற உள்ளது.
முகாம் தொடங்கி 9 நாட்கள் முடிந்துள்ள நிலையில் 51 சதவீதம் பேர் மட்டுமே விண்ணப்ப பதிவு செய்து உள்ளனர். 8 லட்சத்து 47 ஆயிரத்து 654 பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கி பதிவு செய்ய வேண்டும் என்ற இலக்கை மாநகராட்சி முன்நிறுத்தி செயல்பட்ட நிலையில் 4 லட்சத்து 33 ஆயிரம் பெண்கள் மட்டுமே இதுவரையில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.