என் மலர்
தமிழ்நாடு
நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 6-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு
- விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள்.
- போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகம் கடந்த 6 நாட்களாக ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக பரபரப்பு அடைந்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு ஆசிரியர் சங்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்னொரு சங்கம் தங்கள் ஆசிரியர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள்.
ஒரே நேரத்தில் 3 சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் பலர் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளார்கள்.
விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இரவிலும் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். நேற்று இரவில் பலத்த மழை பெய்ததால் டெண்டுகள் காற்றில் பறந்தது. அனைவரும் நனைந்தபடியே கார் பார்க்கிங், கட்டிடங்களின் திண்ணைகளில் ஒதுங்கி நின்றார்கள். மழை ஓய்ந்ததும் உண்ணாவிரத பந்தலை சரி செய்து மீண்டும் வந்து அமர்ந்தார்கள்.
நேற்று வரை 65 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களை உடனடியாக ஆம்புலன்சுகளில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இன்றும் 35 பேர் மயங்கினார்கள்.
25 ஆம்புலன்சுகள், நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஆசிரியர்கள் மனம் தளராமல் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஆசிரியர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் 50 ஆசிரியர்கள் மயங்கி விழுந்த சூழல் மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழக அரசு 14 ஆண்டுகளாக போராடும் ஆசிரியர்களின் போராட்ட த்திற்கு மதிப்பளித்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்தி, ஆசிரியர்களுக்கு உத்தரவாதம் அளித்து, உண்ணாவிரதத்தை கைவிடச் செய்து, நிரந்தரத் தீர்வு காணுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர்களின் உழைப்பை சுரண்டும் செயல்களில் அரசே ஈடுபடுவது நியாயமற்றது. கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் அவர்களின் உரிமைகளைக் கோரி போராடும் நிலைக்கு தள்ளுவதே அவர்களுக்கு இழைக்கப்படும் அவமானம் ஆகும். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த சிக்கலில் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.