என் மலர்
தமிழ்நாடு
சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் விடிய விடிய உண்ணாவிரதம்
- 4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர்.
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (பழைய டி.பி.ஐ. வளாகம்) பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம் என பல்வேறு அலுவலகங்கள் அமைந்து உள்ள இந்த வளாகத்தில், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று அங்கு ஒரே நாளில் 4 ஆசிரியர் சங்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்றன.
ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், பழைய டி.பி.ஐ. வளாகம் நேற்று ஆசிரியர்களின் போராட்டக்களமாக மாறியது.
'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், இடை நிலை ஆசிரியர்கள் கால வரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இதேபோல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதிநேர சிறப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கங்களை சேர்ந்த சுமார் 600 ஆசிரியர்கள் கடந்த 5 நாட்களாக டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானவர்களில் சாப்பிட்டும் சாப்பிடாமலும் உண்ணாவிரதத்தில் பங்கேற்று உள்ளனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று மிகவும் சோர்வாக காணப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை, டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம், பணி நியமனத்துக்கு மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சங்கங்களை சேர்ந்தவர்கள் 600-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வந்து இருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு ஆசிரியர் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் நேற்று டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்களின் 3 விதமான போராட்டம் தொடங்கியது.
ஒரு சாரார் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். மற்றொரு ஆசிரியர் சங்கத்தினர் தங்களுக்கு ஆசிரியர் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இன்னொரு சங்கத்தினர் தங்களுக்கு வேலை வேண்டும் என்பதை பிரதானமாக கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றதால் பழைய டி.பி.ஐ. வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கப் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் கோரிக்கைக்காக தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தியும், எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால் இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் பங்கேற்று உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
4 ஆசிரியர் சங்கத்தினரும் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இரவு அவர்கள் டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து கலைந்து செல்லவில்லை. அங்கேயே படுத்து தூங்கினார்கள். இன்று காலை எழுந்து பல் துலக்கி விட்டு மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.
அருகருகே அமர்ந்து உள்ள அவர்கள் இடையே இடையே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் இன்று காலை முதல் பரபரப்பான சூழ்நிலையில் இருந்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களும் போராட்டத்தில் சேரும் பட்சத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதற்கிடையே, தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் 9 பேர் நேற்று இரவு மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 21 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், 27 பேர் பெண்கள். இன்று காலை வரை 30 பேர் மயங்கி விழுந்தபோதிலும் போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உதவிக்காக ஆம்புலன்சுகளும் தயாராக நிறுத்தப்பட்டு உள்ளன.