என் மலர்
தமிழ்நாடு
மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாக கோவில் கும்பாபிஷேக விழா: கிறிஸ்தவ பாதிரியார்கள் பங்கேற்பு
- 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
- பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன். வீரனார் மற்றும் ஊருக்கு வெளியே காட்டில் காவல் காக்கும் அய்யனார் கோவில் என 3 கோவில்கள் அப்பகுதி மக்களால் திருப்பணி செய்யப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக பணிகள் தொடங்கின. இதன் தொடக்கமாக சிவாச்சாரியார்கள் கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 4 கால வேள்வி பூஜைகள் முடிவுற்ற பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தது.
இதனையடுத்து ராஜகணபதி, வரசித்தி விநாயகர், மஹா மாரியம்மன், வீரனார் மற்றும் ஐயனார் கோயில் கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அப்போது பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். இதைத்தொடர்ந்து நெல் பூக்கள் நவதானியங்களுடன் புனித நீரானது பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. பின்னர் மூலவர்களுக்கு அபிஷேகம் மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
இதில் கிராம நாட்டாண்மைகள், மண்டகபடி வகையறாவினர், நடுவலூர் ஜல்லிக்கட்டு பேரவை உட்பட 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் கிறிஸ்துவ பாதிரியார்கள் ராபர்ட், ஜோசப் தன்ராஜ் ஆகியோர் பங்கேற்றது.
இது மதநல்லிணத்தை எடுத்துக்கட்டும் விதமாக அமைந்தது. கும்பாபிசேகம் நடைபெறும்போது பாதிரியார்கள் இருவரும் கோவில் கோபுரத்தின்மீது ஏறி கலசத்துக்கு புனித நீர் ஊற்றுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.
இந்து கோவில் கும்பாபிஷேகத்தில் கிருஸ்வர்கள் கலத்து கொண்டது மத நல்லிணக்கத்தையும், கிராம மக்களின் ஒற்றுமையும் எடுத்துக்காட்டுவதாக பக்தர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.