என் மலர்
தமிழ்நாடு
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டுகிறது- 6 நாளில் 15 டன் ஆயில் வெளியேற்றப்பட்டது
- 4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது.
திருவொற்றியூர்:
சென்னையில் மிச்சாங் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளம் எண்ணூர் முகத்துவார பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் அப்பகுதியில் உள்ள எண்ணை நிறுவனங்களில் தேங்கி இருந்த எண்ணெய் கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு முகத்துவாரம் மற்றும் கடல் பகுதியில் கலந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டது.
மீனவர்களின் 700-க்கும் மேற்பட்ட படகுகள், வலைகள் ஆகியவை எண்ணெய் கழிவுகளில் சிக்கி சேதமடைந்தன. இதன் காரணமாகவும் எண்ணை படலங்கள் தேங்கி நிற்பதாலும் அப்பகுதியில் உள்ள 8 மீனவ கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
4 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி கடந்த 10-ந்தேதி முதல் நடை பெற்று வருகிறது.
தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கடல் பகுதி மற்றும் முகத்து வாரத்தில் தேங்கியுள்ள எண்ணெய் கழிவுகள் வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன.
சி.பி.சி.எல். நிறுவனம் மீனவர்களோடு சேர்ந்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் வேகம் காட்டி வருகிறது. 70-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்று மீனவர்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றி பேரல்களில் அள்ளி வெளியேற்றி வருகிறார்கள்.
எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு 'ஆயில் சக்கார்' எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 2 எந்திரங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த எந்திரங்களை படகுகளில் கட்டி எண்ணெய் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகளுக்கு இழுத்துச் சென்று பேரல் பேரலாக கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 15 டன் எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
இதன்மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி இறுதிக்கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீரில் மிதந்த படியே கழிவுகளை சேகரித்து டிரம்களுக்கு அனுப்பும் 2 எந்திரங்கள் மூலமாக பணிகள் நடை பெற்று வருவதால் எண்ணெய் கழிவுகள் ஓரளவுக்கு வேகமாக அகற்றப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் 17-ந்தேதிக்குள் (நாளை) எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் எண்ணெய் கழிவுகள் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை வர உள்ளது.
அன்றைய தினம் இதுவரை அகற்றப்பட்டுள்ள எண்ணெய் கழிவுகள் எத்தனை டன்? என்பது பற்றிய முழு விவரங்களை அதிகாரிகள் தெரிவிக்க உள்ளனர்.
இதற்கிடையே எண்ணெய் கழிவுகளை அகற்றுவதற்கு மும்பை மற்றும் ஒடிசாவில் இருந்து நவீன எந்திரங்கள் இன்று வரவழைக்கப்பட இருப்பதாக மாசுகட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த எந்திரங்கள் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும் என்றும், இதன் மூலம் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகள் இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரும் என்றும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.