என் மலர்
தமிழ்நாடு
தீபாவளி பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் வெறிச்சோடிய திருப்பூர்
- திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளது.
- தீபாவளி பண்டிகையின் காரணமாக இந்த கடைகளும் மூடப்பட்டுள்ளன.
திருப்பூர்:
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம், வாகன வசதி போன்றவை நிறுவனங்கள் சார்பில் செய்து கொடுக்கப்படுகின்றன. இதில் தங்கியிருந்து தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வடமாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு செல்கிறவர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் விடுமுறை எடுப்பார்கள். இதன் பின்னரே திருப்பூருக்கு திரும்புவார்கள். இந்நிலையில் பண்டிகையை கொண்டாடுவதற்கு பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மாநகரின் முக்கிய சாலைகளான குமரன் ரோடு உள்ளிட்ட சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. மீண்டும் தொழிலாளர்கள் வந்தவுடனே பழையபடி திருப்பூர் இயங்க தொடங்கும். இதுபோல் ஆடை விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லரை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளிலும் தினமும் ஆடை விற்பனை நடைபெறும். தீபாவளி பண்டிகையின் காரணமாக இந்த கடைகளும் மூடப்பட்டுள்ளன. காதர்பேட்டை பகுதியும் வெறிச்சோடி காணப்படுகிறது.