என் மலர்
தமிழ்நாடு
தமிழக பட்ஜெட்: 5 லட்சம் ஏழைக் குடும்பங்களின் வறுமை ஒழிக்கப்படும்
- வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஏராளமான சலுகைகளை வெளியிட்டார். முதல்-அமைச்சரின் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளும் சலுகை மழையாக அறிவிக்கப்பட்டன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப் பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கி ரீட் வீடுகள் கட்டித் தரப்படும். முதற்கட்டமாக 2024-25-ம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை, தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் வரும் நிதி ஆண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிடும் வகையில், தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சமூகநலத் திட்டங்களின் வாயிலாக வறுமையை குறைப்பதில் நமது மாநிலம் மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
அதை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 22 சதவீதம் மட்டுமே என அறிவித்து உள்ளது. இருப்பினும், தற்போது மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது. அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறிய நிலையில் உள்ள சுமார் 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.
ஆதவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக கல்லூரிகளில் திறன் பயிற்சிக் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் 100 பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திறன் பயிற்சிக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
ஒன்றிய குடிமைப்பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்குத் தயாராக மாதந்தோறும் 7,500 ரூபாய் மற்றும் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு சென்னை, கோவை, மதுரை மண்டலங்களில் உண்டு. உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கிட 6 கோடி ரூபாய் இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசுப் பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடும் பொருட்டு, அரசு பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களது பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயின்றிட உதவித்தொகை அளித்து உதவும் வகையில், ஒரு புதிய திட்டம் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள். பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள்.
இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் 3 லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்லூரிக் கனவை நனவாக்கிடவும், அவர்தம் பெற்றோரின் நிதிச் சுமையைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலும், தேவையின் அடிப்படையில் 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு 2500 கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்கிடுவதை அரசு உறுதி செய்திடும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.