search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே- அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: நீதிபதி கருத்து
    X

    தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே- அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: நீதிபதி கருத்து

    • ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.
    • தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் தீரன் திருமுருகன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஜூன் 2-ம் வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்தனர்.

    கடந்த 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, கிருமி நாசினியை அவர்கள் மீது தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த 2021-ல் குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்டபோது மத்திய அரசு, பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தது. ஆனால் தமிழக மீனவர்கள் விஷயத்தில் அதுபோன்ற நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில், இருக்கும் 26 மீனவர்களுக்கும் சட்ட உதவிகளை வழங்குமாறு அறிவுறுத்தவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு, தமிழக மீனவர்களும், இந்திய குடிமக்களே. அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது என கருத்து தெரிவித்தனர். ஒன்றிய அரசுத்தரப்பில், மீனவர்களை விடுவித்து தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த பிரச்சனை மற்றொரு நாட்டோடு தொடர்புடையது. ஆகவே, தேவையான நடவடிக்கைகளை விரைவாக மத்திய அரசு எடுக்கும் என நீதிமன்றம் நம்புகிறது எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

    Next Story
    ×