என் மலர்
தமிழ்நாடு

ரூ.23 கோடி செலவில் உருவான தி.நகர் நடை மேம்பாலம்- விரைவில் திறக்க ஏற்பாடு

- பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது.
- பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் இந்த வழியாக தி.நகர் பகுதியில் உள்ள கடைகளுக்கு வந்து செல்கிறார்கள்.
எனவே ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலை சந்திப்புக்கு நடந்து செல்லும் வகையில் ரூ.23 கோடி செலவில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட இந்த பாலம் வழியாக பொது மக்கள் நெரிசலில் சிக்காமல் மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தி.நகர் மேட்லி சாலையை அடைய முடியும்.
இந்த பாலம் 600 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டது. கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக இந்த நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தாமதமானது. தற்போது முழு வீச்சில் பணிகள் நடந்து வருகிறது. 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. லிப்ட் அமைக்கும் பணி மட்டும் பாக்கி உள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முடிந்துவிடும். எனவே விரைவில் இந்த பாலத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இந்த பாலத்தில் செல்வதற்காக மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதியும் செய்துதர திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த நடைபால பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் பார்வையிட்டார். மீதமுள்ள பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நடை மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக நடைபாதை வியாபாரிகள் இதை ஆக்கிரமித்துள்ளார்களா? என்பதை கண்டறியவும் அதிகாரிகள் தினமும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.