என் மலர்
தமிழ்நாடு
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் தடுக்க டிரோன் மூலம் கண்காணிப்பு- சென்னை மாநகராட்சி
- மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
- திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு பருவமழையின் போது வெள்ளம் தேங்காமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் தேங்கும் தாழ்வான இடங்கள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஆற்றின் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் உடனடியாக அகற்றப்படும்.
அடையார், கோவளம், கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆற்று பகுதிகளிலும் வெள்ளம் தேங்காமல் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் நீர் நிலை எச்சரிக்கை பற்றிய சென்சார்கள் உள்ளன. ஆனால் டிரோன் கண்காணிப்பு விரைவான மீட்பு பணிக்கான தகவல்களை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'டிரோன் மூலம் செய்யப்படும் ஆய்வுகள் தாழ்வான பகுதிகளை உடனே தெரிந்து கொள்ள உதவும்.
மேலும் மழைநீர் வடிகால்களில் பாதிப்புகளையும் சரிசெய்ய முடியும். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.
கடந்த ஆண்டில், அம்பத்தூரில் 16 இடங்கள், அண்ணாநகரில் 10 இடங்கள் உள்பட மாநகராட்சி முழுவதும் மொத்தம் 37 வெள்ளப் பகுதிகளை சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இதில் 28 இடங்களில் 2 அடிக்கும் குறைவாக தண்ணீர் தேங்கியது. இந்த முறை அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.