search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திடீரென முளைத்த சுற்றுலா தலம்: சுரண்டை பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்
    X

    பூத்து குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்

    திடீரென முளைத்த சுற்றுலா தலம்: சுரண்டை பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்

    • மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர்.
    • திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகம் வருவது குற்றால அருவிகள் தான். இந்த குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் 3 மாதங்கள் சீசன் களைகட்டும்.

    அதே வேளையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆய்க்குடி, அகரக்கட்டு, சாம்பவர்வடகரை, சுரண்டை, கம்பளி, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூரியகாந்தி மலர்கள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகும். அவை முழுவதுமாக பூத்து குலுங்கும் காட்சி பார்ப்பவர்களை மிகவும் கவரும். அந்த வகையில் தற்போது அகரக்கட்டு பகுதியில் சூரியகாந்தி மலர்கள் பூத்துள்ளன. இந்த சூரியகாந்தி மலரை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது அந்த பகுதிகளுக்கு படையெடுத்துள்ளனர்.

    அவர்கள் மலர்களுக்கு நடுவே நின்று தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து வருகின்றனர். தற்போது சீசன் காலகட்டம் என்பதால் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்துவிட்டு கடையநல்லூர், ஆய்க்குடி வழியாக சாம்பவர்வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை காண வருகின்றனர்.

    இதனால் சாம்பவர்வடகரை-சுரண்டை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்தும் பெரும்பாலானோர் குற்றாலத்திற்கு வந்துவிட்டு, இங்கு வந்து சூரியகாந்தியின் அழகை ரசிக்கின்றனர். அவர்கள் மலரின் நடுவே நின்றபடி தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    திடீரென முளைத்த இந்த சுற்றுலா தலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் ஆங்காங்கே சாலையோரத்தில் புதிய வியாபார கடைகளும் தோன்றியுள்ளன.

    அதாவது அந்த பகுதியில் மற்ற நிலங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரைக்காய், சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். மேலும் சிலர் சுரண்டை மார்க்கெட்டில் இருந்து தக்காளி, பல்லாரி, பீட்ரூட், காய்கறிகளை வாங்கி வந்து சாலையோரத்தில் கடை அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் போதிய லாபம் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×