என் மலர்
உள்ளூர் செய்திகள்
உதயநிதி ஜூனியர் அரசியல்வாதி: மக்கள் உணர்வுகளை புண்படுத்த கூடாது- மம்தா பானர்ஜி
- இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் அதை பின்பற்றும் மக்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது.
- நான் அமைச்சர் உதயநிதி மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன்.
சென்னை:
சனாதன தர்மத்தை கொரோனா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அதே போல் சனாதன தர்மத்தையும் அழிக்க வேண்டும் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவரது பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்டுத்தி இருக்கிறது.
பா.ஜனதா இந்த விவகாரத்தை கையில் எடுத்து உள்ளது. சனாதன தர்மம் தொடர்பாக இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன? சோனியா, ராகுல் மவுனம் காப்பது ஏன்? என்று கேள்வி கணைகளை வீசி அரசியல் களத்தில் புயலை கிளப்பி உள்ளது.
மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று பகல் முழுவதும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கருத்து தெரிவித்த ஒரு மணிநேரத்தில் மம்தா பானர்ஜி தனது கருத்தை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. ஏராளமான ஜாதிகளுக்கும், மதங்களுக்கும் இந்தியாவில் இடம் உண்டு. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது அடிப்படை. இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் அதை பின்பற்றும் மக்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது.
அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சித்திவிநாயகர் கோயில் மகாராஷ்டிராவிலும், நாடு முழுவதும் மிகவும் பிரபலமானது. இதேபோல், துர்கா பூஜையும் பிரபலமானது. நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது. நாம் கோவிலுக்கும், மசூதிக்கும், தேவாலயங்களுக்கும் செல்கிறோம். எனவே எந்தப் பிரிவினரையும் புண்படுத்தும் விதமாக நடக்ககூடாது.
நான் அமைச்சர் உதயநிதி மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்து உள்ளேன்.
உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால் எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அது போன்று அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.