என் மலர்
தமிழ்நாடு
விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார்: நீண்ட நாட்களுக்கு பிறகு நேரில் பார்த்ததால் கட்சியினர் உற்சாகம்
- திரண்டிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர்.
- விஜயகாந்த் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துக்கு இன்று 71 வயது ஆகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக அறிவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் விழாவுக்காக காலை 11 மணி அளவில் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் கேப்டன் வாழ்க என்று கோஷம் எழுப்பினர். பின்னர் விஜயகாந்த் ஒரு இருக்கையில் அமர்ந்தபடியே தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.
உடல் நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் தனது பிறந்தநாள் மற்றும் கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியின் போது மட்டுமே தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்த தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
பிறந்தநாளையொட்டி இன்று காலை மற்றும் மதிய உணவுக்கு கட்சி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் இட்லி, பொங்கல் வடையுடன் வழங்கப்பட்டது. மீன் குழம்பு, கோழி கறியுடன் ஆட்டுக்கறி விருந்துடன் சுடச் சுட மதிய சாப்பாடு பரிமாறப்பட்டது. இனிப்புகளும் வழங்கப்பட்டன.
விஜயகாந்தை சந்தித்த தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரோடு போட்டி போட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன், கட்சியின் மாநில நிர்வாகிகள் எல்.கே. சுதிஷ், பார்த்தசாரதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்தித்து வாழ்தது தெரிவித்தனர். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் வி.சி.ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாவட்ட அவை தலைவர் சுப்பு, பொருளாளர், ஷைன் ராஜ்குமார், துணை செயலாளர் பாஸ்கர், தமிழ் செல்வன், பூக்கடை கந்தன், நித்யபாரதி, செயற்குழு உறுப்பினர்கள் கோபிநாத், பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் செ.கணேஷ், சக்திவேல், ஜெபஸ்டின், தி.நகர் பகுதி செயலாளர் லயன் பா.முகமது, அவை தலைவர் குமார், வட்ட செயலாளர்கள் சார்லஸ், அரசப்பன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் வாழ்தது தெரிவித்தனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதன் காரணமாக தே.மு.தி.க. அலுவலகம் இன்று களை கட்டி காணப்பட்டது.