என் மலர்
தமிழ்நாடு
கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரம்
- சென்னை மாநகருக்குள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்க அனுமதி இல்லை.
- சிலைகள் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி 1 வாரத்துக்கு முன் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி சென்னை கொசப்பேட்டையில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி சென்னை கொசப்பேட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் களிமண்ணை கொண்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அரை அடி முதல் 2 அடி உயரம் வரை சிலைகள் உருவாக்கப்படுகின்றன. ரூ.50 முதல், ரூ.300 வரை விலையில் சிலைகள் களிமண்ணால் தயாராகி வருகின்றன.
பல்வேறு விதமான வடிவில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு மெருகேற்றப்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இதுகுறித்து சிலை தயாரிப்பு தொழிலாளி மோகன் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் 100 ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் உற்பத்தியை அதிகப்படுத்தி உள்ளோம். கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் கூடுதலாக விநாயகர் சிலைகள் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கிறோம்.
மூலப்பொருள்களின் விலையேற்றம், இடவசதியின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களால் சிலை தயாரிப்பு செலவுகள் அதிகரித்து உள்ளன.
சென்னை மாநகருக்குள் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்க அனுமதி இல்லை. இதனால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட பல மாநிலங்களில் இருந்து தயாரான பெரிய, உயரமான விநாயகர் சிலைகள் ரெயில், லாரிகள் மூலம் சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் உள்பட பல ஊர்களில் 5 அடி முதல் 12 அடி வரையிலான பெரிய விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிலைகள் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி 1 வாரத்துக்கு முன் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
தற்போது இந்த ஆண்டு பொது வீதிகளில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க போலீஸ் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக சிலை தயாரிப்பு தொழிலில் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில ஆண்டுகளில் சிலைகள் தயாரிப்பு தொழில் இல்லாமல் போய் விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.