என் மலர்
தமிழ்நாடு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காட்டாற்று வெள்ளம்
- காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 2-வது நாளாக தடை விதித்தது.
பென்னாகரம்:
கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து உபரிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரமாக கனஅடியாக தண்ணீர் வந்தது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது. ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 2-வது நாளாக தடை விதித்தது. அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஒகேனக்கல் மீண்டும் வெள்ளக்காடாக மாறி உள்ளதால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.