என் மலர்
தமிழ்நாடு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
- சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
தருமபுரி:
கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து நேற்று மொத்தம் 75 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நேற்று கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
இதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் கபினி, கே.ஆர்.எஸ். ஆகிய அணைகளில் இருந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிக்கும் மேல் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், கர்நாடகா அணைகளில் இருந்து நேற்று மாலை 75 ஆயிரம் கனஅடி அளவுக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கல்லில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகள் மூழ்கும் நிலையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும், காவிரி ஆற்றங்கரையின் இருபுறமும் தொட்டப்படி தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது. மேலும், மெயின் அருவிக்கு செல்லும் வழியாக நடைபாதைக்கு மேலும் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 15-ந்தேதி மாலை முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும், அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்கவும், மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் தடை நீடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால், சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே செல்லாமல் நடைபாதைக்கு செல்லும் வழியில், பூட்டி சீல் வைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல முடியாமல், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க முடியாமலும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடகா அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து உள்ளதால், காவிரி ஆற்றிற்கு வரும் நீர்வரத்து 1 லட்சம் கனஅடி அளவு வரை வரக்கூடும் என்பதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.