search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளழகர் இறங்கிய வைகை ஆற்றின் அருகே முன்விரோதத்தில் வாலிபர் கொலை
    X

    மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது பட்டாக்கத்தியுடன் வாலிபர்கள் மோதிக்கொண்ட காட்சி - (உள்படம்) சோனை

    கள்ளழகர் இறங்கிய வைகை ஆற்றின் அருகே முன்விரோதத்தில் வாலிபர் கொலை

    • படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர்.

    மதுரை:

    மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுவே மோதலாக வெடித்தது. முதலில் அவர்கள் கைளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சூழலில் மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர். அதற்குள் அங்கிருந்த பக்தர்கள் திரண்டு அந்த வாலிபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 2 தரப்பினரும் கூட்டத்தில் பக்தர்களோடு கலந்து பிரிந்து சென்றனர்.

    திருவிழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அழகர், கருப்பசாமி உள்ளிட்ட வேடமிட்டு கள்ளழகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆளுயர திரி, அரிவாள், கத்தி போன்ற வடிவமைக்கப்பட்ட ஒப்பனைகளோடு தீர்த்த வாரியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் நிஜ பட்டாக்கத்தியுடன் திருவிழா கூட்டத்தில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்தில் வாலிபர் கொலை மற்றும் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×