என் மலர்
தமிழ்நாடு
ரூ.64 கோடியில் 17 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்கள்: முதலமைச்சர் காணொலியில் திறந்து வைத்தார்
- அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் வசதிக்காகவும், ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நல்ல காற்றோட்டமான அலுவலக சூழலில் பணியாற்ற ஏதுவாகவும், பழைய பழுதடைந்த கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் திட்டம் 2008-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான அரசால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, தற்போது வரை 312 புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, அதில் 265 கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டக்கூறு நிதியின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், மங்களுர் மற்றும் பண்ருட்டி, ஈரோடு அம்மாபேட்டை, தோவாளை, குன்றாண்டார் கோவில், ஆலங்குளம், மதுக்கூர் மற்றும் சேதுபாவாசத்திரம், சின்னமனூர், கருங்குளம், புள்ளம்பாடி, பொங்கலூர், கானை, மேல்மலையனூர், முகையூர் மற்றும் வானூர் ஆகிய இடங்களில் 64 கோடியே 53 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.