என் மலர்
தமிழ்நாடு
மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை: ஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கும்
- 23-ந்தேதி தேர்வு முடிகிறது
- தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை வரை தேர்வு நடக்கிறது.
சென்னை:
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு 23-ந்தேதியுடன் தேர்வுகள் முடிகிறது. 24-ந்தேதி முதல் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது.
அனைத்து பள்ளிக் கூடங்களும் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை கிடைக்கிறது.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) வரை தேர்வு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து விடுமுறை விடப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாடுகிறவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் இருந்து கேரளா செல்லும் ரெயில்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு, ஆம்னி பஸ்களில் இடங்கள் காலியாக உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை வார நாட்களின் நடுவில் வருவதால் கூட்டம் இல்லை. வார இறுதி நாட்களில் வந்திருந்தால் முன்பதிவு அதிகமாக இருக்கும் என்று தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.