என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை ஜூரம் - பா.ஜ.க. கிண்டல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை ஜூரம் - பா.ஜ.க. கிண்டல்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/09/9112619-bjp.webp)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'அண்ணாமலை ஜூரம்' - பா.ஜ.க. கிண்டல்
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார்.
- அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
ஆவடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், 2026 சட்டப் பேரவை தேர்தல் வரை, கவர்னர் ஆர்.என்.ரவியும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் அவரவர் பதவியில் நீடிக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சாரமே செய்யாமல் திமுக ஆட்சிக்கு வர முடியும் என்றார்.
இது பற்றி தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணாமலையால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்றால், அவரைப் பற்றி ஏன் பதற்றப்பட வேண்டும்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்கு எளிமையானதாக இருக்காது. திமுக கண்டிப்பாக தோற்கடிக்கப்படும் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்பது, அவரது பேச்சில் இருந்து தெரிகிறது. தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், திமுகவினர் பதற்றத்தில் இருக்கிறார்கள்.
திமுக அரசின் ஊழல் முறைகேடுகளை, தி.மு.க.வினரின் மக்களை ஏமாற்றும் தந்திரங்களை எல்லாம் மக்கள் மன்றத்தில் அண்ணாமலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார்.
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடித்தால் திமுகவுக்கு வேட்டு வைத்து விடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவரை எப்படியாவது மாற்றி விடுவார்கள் என்ற நப்பாசையில், அவரே தொடரட்டும் என்று கூறி தற்காலிக இன்பம் அடைந்து வருகிறார்.
அண்ணாமலை ஜுரம் முதல்வர் ஸ்டாலினை ஆட்டி படைக்கிறது. அதனால் தான் திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையை பற்றி பதற்றத்துடன் பேசி இருக்கிறார். அண்ணாமலை பற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது, அண்ணாமலைக்கு கிடைத்த நற்சான்றிதழ்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.