search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சரவைக் கூட்டம் - 86,000 பேருக்கு பட்டா வழங்க முடிவு
    X

    அமைச்சரவைக் கூட்டம் - 86,000 பேருக்கு பட்டா வழங்க முடிவு

    • 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.
    • மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 3 முறை முழுமையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

    இப்போது 2025- 2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் சட்டசபை கூட உள்ள நிலையில் பட்ஜெட்டை இறுதி செய்யும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் கூடியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

    தலைமைச் செயலாளர் முருகானந்தம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட வேண்டிய விசயங்களை பட்டியலிட்டார். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு விசயமாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    சென்னையை சுற்றியிருக்கிற பெல்ட் ஏரியா என்று சொல்லக் கூடிய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கிலோ மீட்டரில் குடியிருப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்ய முடியாமல் இருப்பதும் நமது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவை கூட்டத்தில் சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்டங்களில் உள்ள பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து உள்ளார்கள்.

    அதன் பேரில் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை 6 மாத காலத்தில் முடித்துக் கொடுக்கச் சொல்லி உள்ளார்கள்.

    இதன்படி சென்னையில் மட்டும் 29187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாத காலத்திற்குள் பட்டா வழங்கச் சொல்லி இருக்கிறார்கள்.

    இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962-ல் வந்தது. 62-ல் இருந்து 2025 வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் மிகத் தெளிவாக ஒரு முடிவு எடுத்து 6 மாத காலத்துக்குள் பட்டா வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார்.

    இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளை செய்ய உள்ளோம்.

    சென்னையை சுற்றி இருக்கிற 4 மாவட்ட மக்களுக்கும் இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைய இருக்கிறது.

    அதேபோல மற்ற மாநகராட்சிகளான மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட ஏனைய மாநகராட்சிகளில், இதேபோல பிரச்சனை இருக்கிறது.

    அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கிற மற்ற பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 57,084 பேருக்கு பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 86,271 பேருக்கு பட்டா வழங்க இருக்கிறோம்.

    இன்னும் விடுபட்டவர்கள் மனு கொடுத்தால் அதையும் பரிசீலிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட் சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    Next Story
    ×