search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தம்பதி ஆணவ கொலை வழக்கு: வினோத்குமார் குற்றவாளி என கோவை கோர்ட் தீர்ப்பு
    X

    வினோத்குமார்

    தம்பதி ஆணவ கொலை வழக்கு: வினோத்குமார் குற்றவாளி என கோவை கோர்ட் தீர்ப்பு

    • இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
    • வழக்கில் இதுவரை 14 பேர் சாட்சியம் அளித்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி

    இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது தொடர்பான வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இதுவரை 14 பேர் சாட்சியம் அளித்தனர். இன்று இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.

    அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

    சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். வழக்கு விசாரணையையொட்டி இன்று கோர்ட்டுக்கு இரு தரப்பினரும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.

    Next Story
    ×