என் மலர்
தமிழ்நாடு

கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் எனப்பேசிய திமுக பொறுப்பாளர் நீக்கம்
- நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தர்மசெல்வன் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
- அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
நான் நினைத்தால் கலெக்டர், எஸ்.பி.யை மாற்றிவிடுவேன் என தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பேசிய ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து தர்மசெல்வன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக-வின் புதிய பொறுப்பாளராக எம்.பி. ஆ. மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியத்தை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்குப் பதிலாக தர்மசெல்வன் கடந்த மாதம் 23ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளுடன் பேசியபோது எடுத்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தர்மசெல்வன் "நான் சொல்வதை கேட்கவில்லையென்றால் எந்த அதிகாரியும் இருக்கமாட்டான். இதில் யாரும் தலையிட முடியாது.
நீங்கள் நினைக்கிற ஆட்களையெல்லாம் மாற்ற முடியாது. நான் லெட்டர் கொடுத்தால் தான் மாற்ற முடியும். அதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். கலெக்டர், எஸ்.பி, அதற்கு கீழ் இருக்கும் அத்தனை நிர்வாகமும் நான் சொல்வதை கேட்க வேண்டும். கேட்கவில்லையென்றால் அவர்கள் அந்த பதவியில் இருக்கமாட்டார்கள். இதை நான் செய்வேன்.
என்னிடம் தலைவர், 'அதிகாரிகள் யாராக இருந்தாலும் சரி நீ சொல்வதை யாரும் கேட்கவில்லையென்றால், எனக்கு லெட்டர்பேடில் எழுதி கொடு' என தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பு நீங்கள் எப்படியிருந்தீர்களோ, ஆனால் இனி எதுவாக இருந்தாலும் எனக்கு தெரிய வேண்டும்" என பேசியுள்ளார்.