search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெருங்களத்தூரில் 29-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    பெருங்களத்தூரில் 29-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    • தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை செடிகளால் மூடப்பட்டு கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது.
    • பெருங்களத்தூர் முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த தி.மு.க.வின் ஸ்டாலின் அரசு, கடந்த 44 மாத காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமல், தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதால், மக்கள் பல்வேறு வகைகளில் இன்னல்களைச் சந்தித்து, மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

    அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5, பெருங்களத்தூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தி.மு.க. அறிவித்த தேர்தல் வாக்குறுதிப்படி, பெருங்களத்தூர் மற்றும் பீர்க்கன்கரணை பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    அம்மாவின் ஆட்சியில் பீர்க்கன்கரணை ஏரி 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்பட்டு கரைகள் வலுப்படுத்தப்பட்டன. ஆனால், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை செடிகளால் மூடப்பட்டு கழிவுநீர் குட்டையாக மாறி உள்ளது.

    பெருங்களத்தூர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக் கூடம், வணிக வளாகம், அங்கன்வாடி மையம் மற்றும் நாய்கள் கருத்தடை மையம் முதலானவை நீண்ட காலமாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது பெருங்களத்தூர் பகுதியில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்த 15 பூங்காக்கள், தி.மு.க. அரசின் அலட்சியம் காரணமாக எவ்வித பராமரிப்புமின்றி மிகவும் பாழ்பட்டுள்ளதோடு, மின் விளக்குகள் எரியாத காரணத்தால் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் மதுக்கூடங்களாக மாறி உள்ளது. இதனால், மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

    பெருங்களத்தூர் பகுதியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் பல இடங்களில் சின்டெக்ஸ் டேங்க்குகள் அமைக்கப்பட்டு குடிநீர் தடையின்றி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது இவை பராமரிப்பின்றி பாழ்பட்டு வருவதோடு, ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பெருங்களத்தூர் முழுவதும் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் ஆதங்கத்தோடு தெரிவிக்கின்றனர்.

    பெருங்களத்தூர் முழுவதும் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்காத காரணத்தால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 29-ந்தேதி (புதன் கிழமை) மாலை 4 மணியளவில், பெருங்களத்தூர், காமராஜர் நெடுஞ்சாலை, பெருமாள் கோவில் ரவுண்டானா அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ராசேந்திரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×