என் மலர்
தமிழ்நாடு

தி.மு.க. மட்டும் தான் எங்களுக்கு ஒரே எதிரி- எடப்பாடி பழனிசாமி
- டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
- ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.
தூத்துக்குடி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நேற்று முன்தினம் உள்துறை மந்திரியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவை தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி தாமதமாகி உள்ளது. அதுதொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் தொடர வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் மனு அளித்தோம்.
ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்ததுதான். பிரிந்தது மட்டுமல்ல, இந்த கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
என்றைக்கு அ.தி.மு.க.வின் கோவிலாக இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் இவர் தலைமையில் ரவுடிகள் மூலம் தாக்கினார்களோ அன்றைக்கே அவர் இந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படை யில் அவர் இணைத்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.
அவர் தவிர, நிறைய பேர் இந்த கட்சியில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கூட பல பேர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் பலர் இணைந்து வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும், அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
இலங்கை அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவர்களுடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்களை கைது செய்வது எல்லாம் கண்டனத்துக்குரியது. அதை நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.
நான் முதலமைச்சராக இருக்கும்போதும், அம்மா முதலமைச்சராக இருக்கும் காலத்திலும் சரி, கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களை விடுதலை செய்து அழைத்து வந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் எடுத்து செல்லப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறோம்.
நாங்கள் எதிர் கட்சிதான். ஆட்சியில் இல்லாத போது உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சியல்ல.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை.
காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது.
தி.மு.க. மட்டும்தான் அ.தி.மு.க.வின் ஒரே எதிரி. தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.