என் மலர்
தமிழ்நாடு

முன்கூட்டியே வகுப்புகள் தொடங்குவதால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நாட்கள் குறைக்கப்படுகிறது
- இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது.
- இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார் 1.70 லட்சம் இடங்கள் வரை உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 1.70 லட்சம் என்ஜினீயரிங் இடங்கள் இருக்கும் நிலையில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் வகுப்புகள் முன்கூட்டியே தொடங்கப்பட உள்ளது. இதனால் என்ஜினீயரிங் கலந்தாய்வு நடைபெறும் நாட்கள் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 2-வது வாரத்தில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே தரவரிசை பட்டியலும் முன்னதாகவே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடந்தது.
இந்த ஆண்டு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையின் ஒவ்வொரு செயல்முறையும் ஆன்லைனில் நடைபெற இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்த கலந்தாய்வு கால அளவு குறைக்கப்படலாம். இருந்தாலும் இந்த யோசனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.