search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க. கூட்டணி தீவிரம்
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தி.மு.க. கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க. கூட்டணி தீவிரம்

    • அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
    • எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.

    குறுகிய கால இடைவெளியே இருப்பதால் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க, கூட்டணிகளில் எந்த கட்சியை போட்டியிட வைப்பது? யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பதில் மும்முரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை செல்வப்பெருந்தகை இன்று மாலை அல்லது நாளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

    காங்கிரசை பொறுத்தவரை 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை பொதுத்தேர்தலை விட செலவு மிக அதிகம் ஆகும். அதை காங்கிரஸ் வேட்பாளர்களால் ஈடுகட்டுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.

    எனவே தி.மு.க.வே நேரடியாக களம் இறங்கலாம் என்று தெரிகிறது.

    பெரும்பாலும் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

    இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்பின்போது நாளை மறுநாள் (11-ந்தேதி) அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார் என்று கூறப்படுகிறது.

    கடந்த இடைத்தேர்தலின் போது த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அப்போது அந்த கூட்டணியில் த.மா.கா.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று பேசப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்தை இரு கட்சிகளும் எதிர் பார்க்கின்றன.

    அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.

    கடந்த தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஏற்கனவே காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விடியல் சேகரும் அந்த பகுதியை சேர்ந்தவர்.

    இருவரும் வாசனிடமும் நெருக்கமானவர்கள். எடப்பாடி பழனிசாமியிடமும் நல்ல நட்புடன் இருப்பவர்கள். எனவே இருவரில் ஒருவரை வேட்பாளராக்கலாம் என்று த.மா.கா. கருதுகிறது.

    இது தொடர்பாக நாளை ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளோடு ஜி.கே.வாசனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த தேர்தலில் பொது வேட்பாளருக்கு அ.தி.மு.க. உடன்பட்டால் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

    Next Story
    ×