என் மலர்
தமிழ்நாடு

இன்று கூடுகிறது கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்! விருந்தினர்களுக்கு பரிசாக தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள்
- கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
- தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை 10 மணியளவில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரளா மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் சிங் மான், கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் பிரான்சிஸ் ஜார்ஜ், கேரள காங்கிரஸ் (மணி) கட்சி தலைவர் ஜோஸ் கே.மணி, ஆர்.எஸ்.பி. கட்சி தலைவர் பிரேமச்சந்திரன் ஆகிய தலைவர்கள் கேரளாவில் இருந்தும், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் முன்னாள் எம்.பி. உதய் சீனிவாஸ், தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மகேஷ் கவுத், பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் கட்சி முன்னாள் எம்.பி. இம்தியாஸ் ஜலீல், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சிரோன்மணி அகாலிதளம் கட்சி தலைவர் தல்ஜித் சிங் சீமா, பொதுச்செயலாளர் பல்விந்தர் சிங் பூந்தர், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங்கும், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜூ ஜனதாதளம் கட்சி சார்பில் அமர் பட்நாயக், முன்னாள் மந்திரி சஞ்சய் குமார் தாஸ் பர்மா, ஓடிசா மாநில காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் ஆகிய தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று உள்ளது. மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்களின் பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்திற்கு வருகை தந்துள்ள விருந்தினர்களுக்கு பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்படுகிறது.