search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு: கேரள அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்
    X

    விவசாயிகள் போராட்டத்தால் தமிழக-கேரள எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

    பெரியாறு அணை பராமரிப்பு பணிக்கு இடையூறு: கேரள அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

    • கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின.

    கூடலூர்:

    முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கொண்டு செல்லப்படும் தளவாட பொருட்களை கேரளா தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. இதனை தொடர்ந்து மத்திய கண்காணிப்புக் குழு அறிவுறுத்தியும் 7 மாதங்களாக அணைப்பகுதிக்கு தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு மறுத்து வருகிறது.

    முல்லை பெரியாறு அணை தற்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய கட்டுப்பாட்டில் சென்றதால் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவும், துணைக்குழுவும் சமீபத்தில் கலைக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிக்காக எம்சாண்ட் உள்ளிட்ட தளவாட பொருட்களை 2 லாரிகளில் ஏற்றிக்கொண்டு இடுக்கி மாவட்டம் குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லை பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சோதனை சாவடியில் அந்த லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டது. கேரள நீர்பாசன துறையின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் இன்று 4-வது நாளாக சோதனை சாவடியிலேயே லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. நவம்பர் தொடக்கத்தில் தளவாட பொருட்களை கொண்டு செல்வது தொடர்பாக கடிதத்தை தமிழக நீர்வளத்துறையினர் கேரள வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை அந்த கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

    இச்சம்பவத்தை கண்டித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 5 மாவட்ட விவசாய சங்கத்தினர் சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை லோயர் கேம்ப்பிலேயே தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து 4வது நாளாக பராமரிப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கேரள அரசை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் கேரள எல்லையில் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    நேற்று மாலை தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் லோயர் கேம்ப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து பென்னிகுவிக் மணிமண்டபத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த வாகனங்கள் 1 கி.மீ. தூரத்திற்கு 2 புறமும் அணிவகுத்து நின்றன.

    சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்களும் சிரமத்திற்கு ஆளாகின. இரவு 10 மணிக்கு பிறகும் போராட்டம் தொடர்ந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதன் பிறகு வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

    கடந்த 4 நாட்களாக தமிழக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் யாரும் இதுகுறித்து பேசாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவிக்கையில்,

    தளவாட பொருட்களை கொண்டு செல்ல கேரளா அரசு அனுமதி வழங்காவிட்டால் குமுளியில் 5 மாவட்ட விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும். தமிழக அரசு இப்பிரச்சனையில் மவுனத்தை கலைத்து கேரளா அரசு மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் போராட்டம் மேலும் தீவிரமடையும். அணைப்பிரச்சனையில் சமரசத்திற்கே இடமில்லை என்றார்.

    விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் இருமாநில எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×