என் மலர்
தமிழ்நாடு
ஃபெஞ்சல் புயல்-வெள்ளம் பாதிப்பு: மத்திய குழு இன்று கள ஆய்வை தொடங்கியது
- நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர்.
- செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை இணைச் செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையிலான குழு நேற்று சென்னை வந்தது.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அந்தக் குழுவினர் சந்தித்தனர். குழுவில் மத்திய அரசின் வேளாண்மைத் துறை இயக்குநர் பொன்னுசாமி, நிதித்துறை இயக்குநர் சோனாமணி கவுபம், மத்திய நீர்வளத்துறை இயக்குநர் சரவணன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய குழுவிடம் புயல் பாதிப்பு குறித்த விவரங்களை அறிக்கையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதில் ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை இடைக்காலமாக மற்றும் நிரந்தர அடிப்படையில் சீர் செய்ய ரூ.6,675 கோடி தேவைப்படுகிறது என மத்திய குழுவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அறிக்கையை பெற்றுக்கொண்ட மத்திய குழு அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பிறகு மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம் என்றனர். நேற்று இரவு மத்திய குழு அதிகாரிகள் சென்னையில் தங்கினார்கள்.
இன்று (சனிக்கிழமை) காலை மத்திய குழு அதிகாரிகள் 7 பேரும் விழுப்புரம் மாவட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட அதிகாரிகள் உரிய ஆவணங்களுடன் மத்திய குழுவினரிடம் எடுத்து கூறினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு படங்களையும் மத்திய குழுவிடம் அதிகாரிகள் கொடுத்தனர். அவற்றை மத்திய குழு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து மத்திய குழு விக்கிரவாண்டி பகுதிக்கு புறப்பட்டு சென்றது.
அங்கும் வெள்ள சேத பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) மத்திய குழு கடலூர் மாவட்டத்துக்கு செல்ல உள்ளனர். அங்கு கலெக்டர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. அதன் பிறகு நாளை மதியம் மத்திய குழு அதிகாரிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு செல்ல உள்ளனர்.
புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்தியக்குழு வர வேண்டும், புதுவைக்கு நிவாரணமாக ரூ.614 கோடி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியிருந்தார்.
அதை ஏற்று மத்திய இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் புதுச்சேரி வருகின்றனர் அவர்கள் புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக சென்று பார்வையிடுகின்றனர்.
புதுவை காலாப்பட்டு, தேங்காய் திட்டு துறைமுகம், பாகூர் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்ய உள்ளனர். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் புதுச்சேரி அதிகாரிகளுடன் மழை சேதம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
மத்திய நிபுணர் குழுவினர் வருகையையொட்டி புதுவை தலைமை செயலாளர் சரத் சவுகான் கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் மத்தியக்குழுவினர் பார்வையிட உள்ள இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
செவ்வாய்க்கிழமை (10-ந்தேதி) மத்திய குழு அதிகாரிகள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு செல்ல இருக்கிறார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து படங்கள் மற்றும் தகவல்களை அதிகாரிகள் மத்திய குழுவுக்கு அனுப்பி இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே அந்த மாவட்டங்களுக்கு மத்திய குழு செல்லுமா? என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
பாதிக்கப்பட்ட கள ஆய்வு செய்த பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறையிடம் அறிக்கையை அளிக்க உள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது.