என் மலர்
தமிழ்நாடு
அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு- டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
- நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.
நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).
கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் கடந்த 20 ஆம் தேதி நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.
அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
நெல்லையில் நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பை வழங்க வேண்டுமென தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 23ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார்.