என் மலர்
தமிழ்நாடு
உடுமலை வனப்பகுதியில் சாரல் மழை- முழு கொள்ளளவில் நீடிக்கும் அமராவதி அணை
- அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது.
- இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழையால் ஜூலை 18-ந்தேதி அணை நிரம்பியது.
தொடர்ந்து வடகிழக்கு பருவமழையால் கடந்த நவம்பர் 27-ந்தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து, தற்போது பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள 90 அடியில் 89.51 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 263 கனஅடியாகவும், நீர் திறப்பு 250 கனஅடியாகவும் உள்ளது.
அமராவதி அணை நீர் நிரம்பி ததும்பும் நிலையில், மீன் பிடிப்பு பாதித்துள்ளது. அணையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில், திலேபியா, மிர்கால், ரோகு உள்ளிட்ட மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளர்க்கப்பட்டு மீனவர்கள் வாயிலாக பிடிக்கப்படுகிறது.
இதற்காக தலா 2 பேரை கொண்ட 20 படகுகள், வலைகள் என 20 குழு மீனவர்கள் உள்ளனர். தற்போது, அணை நிரம்பிய நிலையில் காணப்படுவதோடு, பனிப்பொழிவு அதிகரித்து குளிர் சீதோஷ்ண நிலையும் காணப்படுகிறது.
இதனால் இரவு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி தடைபட்டுள்ளது. காலை 10 மணிக்கு துவங்கி மாலை, 5 மணி வரை மட்டுமே, மீனவர்கள் வலை விரித்து மீன் பிடிக்கின்றனர். நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், குறைந்தஅளவு மட்டுமே மீன் சிக்குகிறது. வழக்கமாக, 300 கிலோ வரை மீன் கிடைத்து வரும் நிலையில், தற்போது 100 கிலோவுக்கும் குறைவாகவே கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அமராவதி அணை சுற்றுலா தலமாக உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வனத்துறை முதலை பண்ணை, அமராவதி அணை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மகளிர் சுய உதவி குழு வாயிலாக அமராவதி அணையில் படகு சவாரி செயல்படுத்தப்படுகிறது. பருவமழை பொழிவால், அணை நிரம்பிய நிலையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதமாக படகு சவாரி முடங்கி உள்ளது.