என் மலர்
தமிழ்நாடு
திருப்பூரில் சாரல் மழை- பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை
- திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
- வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
திருப்பூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய கிழக்கு இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருப்பூரில் கடந்த ஒரு வாரமாக வெயில் அடித்து வந்ததுடன், அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
காலை 6 மணியளவில் லேசான தூரலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். பலர் மழையில் நனைந்தபடியும், குடைபிடித்தபடியும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றனர். வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சேறும் சகதியுமாக மாறின.
மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், பல்லடம், அவினாசி, உடுமலை உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஏற்கனவே மாவட்டம் முழுவதும் பனியின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில், இன்று காலை பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.