என் மலர்
தமிழ்நாடு

விஜய்க்கு பதிலடி கொடுக்க தயாராகும் கமல்- நாளை முக்கிய ஆலோசனை
- சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
- தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகிறது.
அந்த வகையில் கமல்ஹாசன் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து கட்சியினருக்கு முக்கிய அறிவுரைகளை வழங்குகிறார்.
வருகிற ஜூலை மாதம் தி.மு.க. சார்பில் மேல்சபை எம்.பி.ஆக இருக்கும் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
இதற்காக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்வதற்கும் அவர் முடிவு செய்திருக்கிறார். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. இதுபற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தி.மு.க.வுக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல்ஹாசனையும் களமிறக்க தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் கமல்ஹாசனை அதிக அளவில் சுற்றுப்பயணம் செய்ய வைத்து அவருக்கு பதிலடி கொடுக்கலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் 2026-ம் ஆண்டு தேர்தல் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட இருப்பதாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.