என் மலர்
தமிழ்நாடு

தலைமை பதவிக்கு வரும்போது பெண்களுக்கு எதிராக ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது- கனிமொழி

- மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும்.
- பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது.
சென்னை:
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இந்திய உணவு கழக வளாகத்தில் இன்று மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் உணவு கழக நிர்வாக இயக்குனர் ஜெசிந்தா லாசரஸ், பொது மேலாளர்கள் சைனி வில்சன், முத்துமாறன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
இந்திய உணவுக் கழகத்தில் 30 சதவீத பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இது அரசியல் சூழலில் இருப்பதை விட அதிகம் தான்.
மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் மட்டுமல்ல பெண்களின் உரிமை பற்றியதாகும். இந்த அரசாங்கம் பெண்களுக்காக எவ்வளவோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுபோன்று இருக்கும்போது பெண்கள் படித்து முடித்துவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றால் அது இந்த நாட்டுக்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று அப்போதே கேட்டவர் தந்தை பெரியார். அவரைப் போன்று பெண்களின் உரிமைக்காக விடுதலைக்காக இதுவரை எந்த தலைவரும் குரல் கொடுத்தது இல்லை.
டெல்லியில் ஒரு பெண் முதலமைச்சராக நியமிக்கப்பட்டபோது அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பல மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கருத்தையும் சொல்லவில்லை. ஒரு பெண்ணுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதால் தான் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் முதல்வராக தகுதியற்றவர் என்று பேசினார்கள்.
இத்தனை மாநிலங்களில் ஆண்கள் முதலமைச்சராக வந்தபோது எந்த கேள்விகளும் எழவில்லை ஆனால் ஒரு பெண் தலைமையிடத்திற்கு வரும் பொழுது ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுகிறது. நம்மால் இந்த செயலை செய்ய முடியுமா? என்று சிந்திக்காமல் அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
பெண்களுக்கு இன்னும் கூடுதலாக பாதுகாப்பு தேவையாக உள்ளது. அவர்கள் எங்கு செல்ல நினைத்தாலும் சுதந்திரமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு கனிமொழி பேசினார்.