என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வழக்கறிஞர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? -  2 தனிப்படை அமைத்து விசாரணை
    X

    உத்திரகுமார்

    வழக்கறிஞர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டாரா? - 2 தனிப்படை அமைத்து விசாரணை

    • உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
    • முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகன் உத்திரகுமார் (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு செய்து உத்திரகுமார் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

    உத்திரகுமார் பல ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு, வாரச்சந்தை, மீன் மார்க்கெட் போன்ற பொது ஏலங்களிலும் கலந்து கொண்டு ஏலம் எடுத்து வந்துள்ளார்.

    இவர் மீது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குகள், கொலை வழக்கு, கொடுக்கல் வாங்கல் வழக்குகள், அடிதடி வழக்குகள், பொது ஏலத்தில் கலந்து கொண்டு தகராறு செய்த வழக்குகள் என பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பழனிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் உத்திரகுமார் சிறை சென்று வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று இரவு பரமக்குடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்று விட்டு உத்திரகுமார் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை ஹெல்மெட் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது மர்ம நபர்கள் அவரை மறித்து வாளால் சரமாரியாக தலை, கழுத்து உள்ளிட்ட பகுதியில் வெட்டி விட்டு தப்பினர். இதில் உத்திரகுமார் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வாள் வெட்டில் அவரது தலை முற்றிலும் சிதைந்து காணப்பட்டது.

    உத்திரகுமார் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் ஓடி வந்து உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடரந்து உடலை மீட்ட போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்திரகுமாரின் அக்கா மகன் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏதேனும் முன் விரோதத்தின் காரணமாக இக்கொலை நடந்து உள்ளதா? அல்லது பழிக்கு பலியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×