என் மலர்
தமிழ்நாடு

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த குணால் கம்ராவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியது
- மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
- வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.
காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.
குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.