என் மலர்
தமிழ்நாடு

ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடம் நிரப்ப அரசு நடவடிக்கை- உயர்கல்வித்துறை அமைச்சர்
- மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
- செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.
ஈரோடு:
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.
மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.
பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.