search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
    X

    7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமையும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    • பஸ்சுக்கு ‘ஸ்டாலின் பஸ்’ என்றே பெயர் வைத்துவிட்டார்கள், இதுதான் விடியல் ஆட்சி!
    • தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒரு சமூகச் சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி, ஆறாவது முறை ஆட்சியைக் கைப்பற்றிய வரலாறு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான் உண்டு. நிச்சயமாகச் சொல்கிறேன்... 7-வது முறையும் ஆட்சி அமைத்து ஏற்றம் காணும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் அமையப் போகிறது.

    அதற்கு அடித்தளமான இந்த 6-வது முறை ஆட்சி அமைந்தபோது, "இது விடியல் ஆட்சியாக அமை யும்" என்று சொன்னோம். மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் எதிர்க்கட்சிகள் "விடியல் எங்கே" என்று கேட்கிறார்கள். விடியலை தரப்போவதாக சொன்னது மக்களுக்குத்தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு இல்லை. விடியலைப் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத்தான் செய்யும்.

    விடியலின் அடையாளம் எது தெரியுமா? நான் செல்கின்ற இடமெல்லாம் கூடுகின்ற மக்களின் முகங்களில் தெரியும் மகிழ்ச்சிதான் விடியலின் அடையாளம்!

    மாதந்தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்களே... அப்போது அவர்கள் முகங்களைப் பாருங்கள்... அதில் தெரியும் மகிழ்ச்சி தான் விடியல் ஆட்சி! "தாய் வீட்டுச் சீர் போன்று எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திரச் சீர்" என்று என்னரும் தமிழ்ச் சகோதரிகள் மனம் மகிழச் சொல்கிறார்களே... அதுதான் விடியல் ஆட்சி! ஆட்சிப் பொறுப்பேற்றதும் கோட்டைக்குச் சென்று நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்துக்குத்தான்! இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்திருக்கிறது. மாதந்தோறும் 600 முதல் 1200 ரூபாய் வரை அவர்களுக்கு மிச்சமாகிறது; அதை சேமிக்க முடிகிறது என்று சொல்கிறார்கள்.

    சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை இது அதிகரித்திருக்கிறது. அந்த பஸ்சுக்கு 'ஸ்டாலின் பஸ்' என்றே பெயர் வைத்துவிட்டார்கள், இதுதான் விடியல் ஆட்சி!

    அடுத்து, என்னுடைய கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம். "எத்தனையோ தொழில்களைத் தொடங்குகின்றீர்கள், அதில் பணியாற்ற திறமைசாலிகளாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கித் தாருங்கள்" என்று சொன்னதை வைத்துத்தான் இந்தத் திட்டத்தை உருவாக்கினேன்.

    இந்தத் திட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்பட்டிருக்கிறது. பயிற்சி பெற்ற பல லட்சம் மாணவர்களுக்கு உடனடியாக வேலை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லோரையும் ஒவ்வொரு துறையில் இந்தத் திட்டம் முதல்வனாக ஆக்கி வருகிறது, இதுதான் விடியல் ஆட்சி.

    அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வி பயில உருவாக்கின திட்டம்தான் 'புதுமைப் பெண் திட்டம்'. மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்தத் திட்டம் மூலமாக மாணவிகள் கல்லூரிக்கு வருவது 30 விழுக்காடு அதிகமாகி இருக்கிறது.

    இதேபோல, தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். மாதந்தோறும் 2 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவியர் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்தியிருக்கின்றோம். அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமல்ல, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் புதுமைப் பெண் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம்.

    தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஒரு மாணவி பேசினார்-"என் குடும்ப வறுமை காரணமாகக் கல்லூரிக்குப் போய் படிக்க முடியுமா? என்று சந்தேகமாக இருந்தது, பணம் இல்லை, அதனால் வேண்டாமென்று என் அம்மா சொல்லிவிட்டார்.

    புதுமைப் பெண் திட்டத்தைக் கேள்விப்பட்டு, என் கல்லூரிச் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும் என் அம்மா சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால், தினமும் பஸ்சில் போக வேண்டுமே என்று அவர் சொன்னார். அதற்குத்தான் விடியல் பயணம் இருக்கின்றதே என்று நான் சொன்னேன்.

    ஆக, இரண்டு திட்டங்களையும் பயன்படுத்திக் கொண்டு இன்று நான் படித்து வருகிறேன்" என்று அந்த மாணவி சொன்ன சொற்கள்தான் விடியலுக்கான சாட்சி! அதனால்தான் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை "அப்பா, அப்பா" என்று வாய் நிறைய அழைக்கும்போது அள வில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நேரடியாக பலனடையும் வகையிலான திட்டங்களைத் தீட்டும் ஆட்சிதான் உதயசூரியனின் ஆட்சி. இந்த ஆட்சி உருவானபோது இதை திராவிட மாடல் ஆட்சி என்று நான் சொன்னேன். திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு வயிறு எரிகிறது. "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்வது போன்று, திராவிடம் என்ற சொல்லைப் பார்த்துச் சிலர் பயப்படுகின்றார்கள்.

    திராவிட கருத்தியல் கொள்கை யால்தான் தமிழ்நாடு இன்று வளர்ந்த மாநிலமாக இருக்கின்றது. தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    Next Story
    ×