search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தினந்தோறும் படுகொலைகள்.. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை- அண்ணாமலை
    X

    தினந்தோறும் படுகொலைகள்.. இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை- அண்ணாமலை

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர்.
    • ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

    இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

    சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

    இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×