என் மலர்
தமிழ்நாடு

முல்லைப்பெரியாறு அணையில் புதிய கண்காணிப்பு குழு 7-ந்தேதி ஆய்வு

- கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராகேஷ்காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு இருந்தது. ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது.
கடந்த ஆண்டு ஜூன் 13ந் தேதி அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022ம் ஆண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது.
கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்பட்டது. புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் உள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழு வருகிற 7ந் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்கசிவு கேலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அன்றைய மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1763 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 61.01 அடியாக உள்ளது. 234 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 722 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3821 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை 1.2, மஞ்சளாறு அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.