என் மலர்
தமிழ்நாடு
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக் பிறந்தநாளில் பொங்கல் வைத்து கிராம மக்கள் உற்சாகம்
- விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
- மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
கூடலூர்:
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான்பென்னிகுவிக். அவரது பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பென்னிகுவிக் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் அதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் வருடம் தோறும் பென்னிகுவிக் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளன்று ஊர் பொங்கல் வைத்து கொண்டாடுவது கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த முயற்சியில் கட்டித் தந்து 5 மாவட்டங்களுக்கு விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
பாலார் பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி காளை மாடுகளுடன் பென்னிகுவிக் உருவப்படத்தை சுமந்துகொண்டு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக வந்தனர்.
அவர்களுடன் மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரின் மையத்தில் உள்ள பென்னிகுவிக் நினைவு அரங்கம் முன்பு அனைவரும் ஒன்றாக பொங்கலிட்டு பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தீபாராதனை காட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மலேசியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கிராம பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து 26 ஆண்டுகளாக பென்னிகுவிக் பிறந்தநாளில் பொங்கல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பென்னிகுவிக்கிற்கு பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் பங்கேற்ற மலேசிய தமிழர்கள் தாங்கள் இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக ஒரு பொங்கல் கொண்டாட்டத்தை கண்டதில்லை என்றும் பென்னிகுவிக் பற்றி தங்களுக்கு தெரியாத நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்து பிரமிப்பு அடைவதாக தெரிவித்தனர்.
கிராமத்து மக்களுடைய தேவராட்டம் தங்களை கவர்ந்ததாகவும் தாங்கள் பழகி ஆட விரும்புவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்பதாக கூறி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, உத்தமபாளையம் நகர்மன்ற தலைவர் பத்மாவதிலோகன்துரை, பி.ஆர்.ஓ. நல்லதம்பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.