என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பரிசுத்தொகுப்பு 67 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் தகவல்
- பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
- மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சென்னை:
அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
கடந்த 9-ந் தேதி சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம் சின்னமலை வேளச்சேரி பிரதான சாலையில் இயங்கிவரும் சைதாப்பேட்டை-11 நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கி திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 34,793 நியாய விலைக்கடைகளில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 50 ஆயிரம் கூட்டுறவுத்துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நேற்று வரை தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 584 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 67 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.